Showing posts with label குர்ஆன் ஓதுவதின் சிறப்பு. Show all posts
Showing posts with label குர்ஆன் ஓதுவதின் சிறப்பு. Show all posts

Tuesday, 12 May 2020

குர்ஆன் ஓதுவதின் சிறப்பு

                குர்ஆன் ஓதுவதின் சிறப்புகள்

நண்பர்களே !

முஸ்லிம்கள் ஆகிய நாம் குர்ஆனை ஏன் கற்று கொள்ள வேண்டும் என்று தெரியுமா?

குர்ஆன் நம் வாழ்க்கைக்கு வழிகாட்டுதல் ஆக இருக்கிறது, இஸ்லாமியர்களின் சட்ட நூலாக இருக்கிறது, இஸ்லாத்தை விளங்குவதற்காக குர்ஆனே மைய்ய நூலாக இருக்கிறது, அதுமட்டும்மல்ல; குர்ஆன் முஃமின்களுக்கு நன்மைகளை வாரி வழங்கும் பொற்களஞ்சியமாக இருக்கின்றது.

குர்ஆன் இரண்டு விதமான நன்மைகளைத் தன்னுள் உள்ளடக்கியிருக்கிறது. ஒன்று, அதை அதன் மூல மொழியான அரபியில் வாசிக்கின்ற போது கிடைக்கும் நன்மைகள். மற்றொன்று அதைப் பொருளுணர்ந்து நம் தாய் மொழியில் படிக்கும் போது கிடைக்கும் நன்மைகள்.

ஆனால், இன்று இவ்விரண்டு விதமாகவும் படிக்கின்ற வாய்ப்புகள் மிக இலகுவாக இருந்தும்கூட அதைப் பயன்படுத்தாமல் மக்கள் அலச்சியம் காட்டுகிறார்கள்.

குர்ஆனைத் தெரிந்து கொள்வது சிரமமாக இருந்த கால கட்டத்தில் கூட நபித்தோழர்களும், நபித்தோழியர்களும் குர்ஆன் மூலம் கிடைக்கும் நன்மைகளை அறிந்து வைத்திருந்ததால் நபி(ஸல்) அவர்கள் உரை நிகழ்த்தும் போது ஓதும் குர்ஆன் வசனங்களையும், அத்தியாயங்களையும் கேட்டு மனனம் செய்துக் கொண்டார்கள்.

இன்றைய நவீன வாழ்க்கையில் உலகமே நம் உள்ளங்கையில் இருக்கிறது. நாம் இருக்கின்ற இடத்தில் இருந்து கொண்டே குர்ஆனை அரபியிலும் ஓதலாம், தமிழிலும் பொருளுணர்ந்து படிக்கலாம்.

குர்ஆன் ஓதத்தெரியாமல் எவ்வளவு வயதைக் கடந்திருந்தாலும் ஓதத் தெரிந்தவர்களிடம் சென்று கற்றுக் கொள்ளலாம்,அதற்கான வழிமுறைகளும் சாத்தியமும் உண்டு.

வயது கடந்து விட்டது என்ற வீண் வெட்கவுணர்வு இவ்விஷயத்தில் நன்மைகளில் முந்திச் செல்வதை விட்டும் நம்மைத் தடுத்து விட வேண்டாம். ஏனெனில், குர்ஆனை அரபு மொழியில் ஓதுவதற்கான நன்மைகள் ஏராளம்!

“அல்லாஹ்வின் அருள் மறையான திருக்குர்ஆனிலிருந்து ஓர் எழுத்தை ஒருவர் ஓதினால் அவருக்கு ஒரு நன்மை உண்டு. அந்த ஒரு நன்மை பத்து மடங்கு கொண்டதாகும். அலிஃப், லாம், மீம் என்பது ஒரு எழுத்து என்று நான் கூற மாட்டேன்.மாறாக அலிஃப் ஒரு எழுத்து, லாம் ஒரு எழுத்து, மீம் ஒரு எழுத்து” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: திர்மிதீ 2910.

‘‘குர்ஆனை மனனமிட்டு(ச் சிரமமின்றி) ஓதி வருபவர் கண்ணியம் நிறைந்த தூதர்க(ளான வானவர்க)ளைப் போன்றவராவார். குர்ஆனை (மனனம் செய்திராவிட்டாலும் அதனைச்) சிரமத்துடன் தொடர்ந்து ஓதி வருகின்றவருக்கு இரு மடங்கு நன்மைகள் உண்டு’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: புகாரி 4937.

அல்லாஹ்வின் வேதத்தைப் படித்து, தொழுகையை நிலை நாட்டி, நாம் அவர்களுக்கு வழங்கியதிலிருந்து இரகசியமாகவும், பகிரங்கமாகவும் இழப்பில்லாத ஒரு வியாபாரத்தை எதிர்பார்த்து (நல் வழியில்) செலவிடுவோர்களின் கூலிகளை அவன் முழுமையாக அளிப்பான். தனது அருட்கொடைகளில் அவர்களுக்கு இன்னும் அதிகமாகவும் அளிப்பான். அவன் மன்னிப்பவன்; நன்றி செலுத்துபவன். (அல்குர்ஆன்:35:29, 30).

சற்றுக் கற்பனையாகக் கணக்கிட்டுப் பாருங்கள்! ஒரு எழுத்திற்குப் பத்து நன்மை! பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம் என்று ஓதினாலே 19 எழுத்துக்கள் என்ற அடிப்படையில் 190 நன்மைகள் கிடைக்கும். இவ்வாறாக ஒவ்வொரு நாளும் குர்ஆனில் ஒரு பக்கத்தை ஓதி வந்தால் எவ்வளவு நன்மை கிடைக்கும்? நம் கற்பனை கணக்கிற்குக் கூட எட்டாத எண்ணிக்கையளவு நன்மைகளை அள்ளித் தருகிறது அல்குர்ஆன்.

இந்த நன்மைகளோடு சேர்த்து இறைவனின் அருள் மழையையும் நம் வாழ்வில் பொழிய வைக்கிறது.

‘‘மக்கள் இறையில்லங்களில் ஒன்றில் ஒன்றுகூடி, அல்லாஹ்வின் வேதத்தை ஓதிக் கொண்டும் அதை ஒருவருக்கொருவர் படித்துக் கொடுத்துக் கொண்டும் இருந்தால், அவர்கள் மீது அமைதி இறங்குகிறது. அவர்களை இறையருள் போர்த்திக் கொள்கிறது. அவர்களை வானவர்கள் சூழ்ந்து கொள்கின்றனர். மேலும் இறைவன், அவர்களைக் குறித்துத் தம்மிடம் இருப்போரிடம் (பெருமையுடன்) நினைவு கூருகிறான்’’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: முஸ்லிம் 5231.

இவ்வாறாக, திருக்குர்ஆனை அதன் மூல மொழியில் படிப்பது, பல நன்மைகளையும் இறையருளையும் நமக்குப் பெற்றுத் தரக்கூடியதாக இருக்கின்றது. ஆனால்
இதுபோன்று குர்ஆனைப் படிப்போர் மிக மிகக் கணிசமான தொகையினரே!

குர்ஆன் தான் நமக்கு அருளப்பட்ட வேதம், அதைப் படிப்பது தான் நமக்கு இவ்வுலகிலும் மறுமையிலும் பலன் அளிக்கும். ஆனால் இன்று அந்தக் குர்ஆனை மறந்துவிட்டு, அதன் நன்மைகளை விட்டுவிட்டு, இஸ்லாத்தோடு எந்தத் தொடர்பும் இல்லாத மவ்லிதுப் புத்தகங்களில் தங்களில் ஒட்டுமொத்த வாழ்வையும் சிலர் அடகு வைத்திருப்பதை பார்க்கின்றோம்.

ஆண்டுக்கொரு முறையோ அல்லது இரு முறையோ, யாரேனும் இறந்து விட்டாலோ, அல்லது ரமலான் வந்து விட்டாலோ குர்ஆனைத் திறப்பவர்கள் மவ்லிது கிதாபுகளைத் தினந்தோறும் பக்தியோடு அணுகக் கூடிய காட்சிகளைப் பார்க்கின்றோம்.

அல்லாஹ் நம் அனைவரையும் இப்படிப்பட்ட காரியங்களில்லிருந்து பாதுகாப்பான்னாக!

குர்ஆனை அரபு மொழியில் ஓதி, நன்மைகளை மலைச் சிகரங்களாக மறுமைக்குச் சேமிப்போம்.இன்ஷால்லாஹ் ..

இன்னும், நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்,

*நீங்கள் குர்ஆனை ஓதுங்கள். நிச்சயமாக அது நாளை மறுமையில் அதை ஓதியவருக்கு ”பரிந்துரை” செய்யும். (ஆதாரம்: முஸ்லிம்)

* குர்ஆனை ஓதி அதன்படி அமல் செய்தவரையும், குர்ஆனையும் நாளை மறுமையில் கொண்டு வரப்படும், குர்ஆனின் இரண்டு சூராக்கள் அல்பகரா, ஆலு இம்ரான் முன் வந்து அந்த இரண்டையும் ஓதியவருக்காக அல்லாஹ்விடத்தில் வாதாடும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம்)

*உங்களில் சிறந்தவர், குர்ஆனைக் கற்று அதை பிறருக்கு கற்றுக் கொடுத்தவர் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)

*குர்ஆனை உரிய முறையில் ஓதி அதன் படி செயல்பட்டவர் நாளை மறுமையில் சங்கையான உயர்ந்த மலக்குகளுடன் இருப்பார். கஷ்டப்பட்டு திக்கித் திக்கி ஓதுபவருக்கு இரண்டு மடங்கு கூலி கிடைக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)

*அல்லாஹ்வுடைய வேதத்திலிருந்து யார் ஒரு எழுத்தை ஓதுகின்றாரோ, அவருக்கு ஒரு நன்மை கிடைக்கும். ஒரு நன்மை செய்தால், அதை பத்து மடங்காக்கப்படும். (ஆதாரம்: திர்மிதி)

*‘‘எவருடைய உள்ளத்தில், குர்ஆனில் கொஞ்சம் கூட மனனம் இல்லையோ, அவருடைய உள்ளம் பாழடைந்த வீட்டைப்போல்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: திர்மிதி)

விளக்கம்: படித்து, சிந்தித்துச் செயல்பட வேண்டும் என்பதற்காகத்தான், குர்ஆனை அல்லாஹ் நமக்கு அருளினான். ஆனால், முதிய வயதை அடைந்தும் குர்ஆனை ஓதத் தெரியாதவர்கள் நம்மில் பலர் உள்ளனர். இது கவலை தரக்கூடிய ஒன்றாகும். முதிய வயதாகிவிட்டாலும் குர்ஆனைக் கற்றுக் கொள்ள முடியும் என்பதை சம்மந்தப்பட்டவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். உங்களை மரணம் வந்தடைவதற்கு முன், தெரிந்தவர்களிடம் சென்று, குர்ஆனை கற்றுக் கொள்ளுங்கள். புதிதாக இஸ்லாத்தை ஏற்ற பல சகோதர சகோதரிகள், குர்ஆனை சரளமாக ஓதவும், அதன்படி செயல்படவும் செய்கின்றார்கள். நாமோ பரம்பரை முஸ்லிம் என்று கூறிக்கொண்டு, நமது வழிகாட்டியாகிய குர்ஆனைப் பற்றி, எதுவும் தெரியாதவர்களாக இருக்கின்றோம். முஸ்லிம்களே! தயவு செய்து குர்ஆனைப் படியுங்கள், அதைப்படிப்பது மிகவும் அவசியமானது. அதைப்படிப்பது மிகவும் இலகுவானது. அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்.

திட்டமாக, நாம் குர்ஆனை உபதேசம் பெறுவதற்காக எளிதாக்கி இருக்கின்றோம். ஆகவே, (இதனைக் கொண்டு) படிப்பினை பெறக்கூடியவர் உண்டா? (அல்குர்ஆன் 54:22)

ஆகவே, அன்புள்ள சகோதர சகோதரிகளே! குர்ஆனை அதிகமதிகம் ஓதுங்கள்.விஷேசமாக, குர்ஆன் இறங்கிய இந்த ரமளான் மாதத்தில் அதிகமாக ஓதுங்கள். ஒரு எழுத்தை ஓதினால் குறைந்தது பத்து நன்மை கிடைக்கின்றது. ஒரு நாளில் எத்தனையோ எழுத்துக்களை படிக்க நமக்கு வாய்ப்பிருக்கின்றது. சந்தர்ப்பத்தை தவற விடாதீர்கள். குர்ஆனைப் அதிகமாக ஓதி நன்மையை பெற அல்லாஹ் நம் அனைவருக்கும் வாய்ப்பளிப்பானாக..! ஆமீன்.


குறுகிய கால பயற்சி / நீங்கள் விரும்பும் நேரத்தில்...

குர்ஆனை நவீன முறையில் எளிதாக கற்றுக்கொள்ள விரும்புபவர்கள், உங்கள் பெயர் மற்றும் தொலைபேசி எண் இந்த மின்னஞ்சலில் (thaleemulquran@gmail.com)  அனுபவும்.